H-1B விசா முறை ஒழிக்கப்படும்…விவேக் ராமசாமி பரப்புரை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் H-1B விசா முறை ஒழிக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் ராமசாமி பரப்புரை செய்துள்ளார்.
இந்தியாவில் மென்பொருள் துறையில் செயல்படும் அனைவரும் பொதுவாக விண்ணப்பிக்கும் இந்த விசாவானது, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்திக்கொள்ள அனுமதிக்கிறது.இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா முறையை நம்பியுள்ளன.
இந்த முறையை ஒழிக்க வேண்டும் என வாதிடும் விவேக் ராமசாமியும், இதுவரை 29 முறை இந்த விசா வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டுள்ளார். ஆனால் தற்போது இந்த முறை சரியல்ல என விவேக் ராமசாமி வாதிட்டு வருகிறார்.
விவேக் ராமசாமியின் Roivant Sciences நிறுவனத்தில் மொத்தம் 904 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் அமெரிக்காவில் 825 பேர்கள் பணியாற்றுகின்றனர். இவரது நிறுவனமே மொத்தம் 29 H-1B விசாக்களை பெற்றுள்ளது.இது மட்டுமின்றி, அமெரிக்காவில் குடியேறிய தம்பதியின் மகனான விவேக் ராமசாமி, குடியேற்றக் கொள்கையில் கடுமையான மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கப்படும் விசாவில் ஒன்று H-1B. 2021ல் மட்டும் அமெரிக்க நிறுவனங்கள் மொத்தம் 780,884 விண்ணப்பங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தது. ஆனால் H-1B விசா மொத்தமாக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையானது 85,000 மட்டுமே.