அமெரிக்காவில் காப்புறுதி பணத்திற்காக கரடி வேடம் அணிந்து கார்களை அழித்த நால்வர் கைது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றும் முயற்சியில் கரடிகள் போல் உடையணிந்து தங்களது சொந்த சொகுசு கார்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நூறாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான பிரத்யேக வாகனமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு வாகனத்தில் கிழிந்த இருக்கைகள் மற்றும் சேதமடைந்த கதவுகளுக்கு உரிமை கோரப்பட்டபோது சந்தேகங்கள் எழுந்தன.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வெளியே உள்ள மலைப்பகுதியான லேக் அரோஹெட் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது கரடி ஒன்று காரில் ஏறி அதன் உட்புறத்தில் பேரழிவை ஏற்படுத்தியதாக உரிமை கோருபவர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் கூற்றை ஆதரிப்பதற்காக, அவர்கள் சேதத்தின் புகைப்படங்களையும் பாதுகாப்பு கேமராவில் இருந்து காட்சிகளையும் வழங்கினர், அவை வாகனத்தின் உள்ளே விலங்கு இருப்பதைக் காட்டியது.
“வீடியோவை மேலும் ஆய்வு செய்ததில், கரடி உண்மையில் கரடி உடையில் இருந்த நபர் என்பது விசாரணையில் உறுதியானது” என்று கலிபோர்னியா காப்பீட்டுத் துறையின் வெளியீடு தெரிவித்துள்ளது.
காப்பீட்டுத் தொகைக்காக போலி கரடி தாக்குதல் நடத்திய வீடியோக்கள் காட்டப்பட்டதை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.