மலேசியாவில் பள்ளி உணவகத்தில் நச்சுணவு; 101 மாணவர்களுக்கு பாதிப்பு
பள்ளி உணவகத்தில் விற்கப்பட்ட பொரித்த கோழியையும் சாக்லேட் பானத்தையும் உட்கொண்டதால் 101 மாணவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு ஏற்பட்டதாக ‘மலேமெய்ல்’ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.ஈப்போவிலுள்ள ‘எஸ்கே செப்போர்’ பள்ளியில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடைய ஐந்து மாணவர்கள் குறித்து செப்டம்பர் 25ஆம் தேதி காலை எட்டு மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பேராக் சுகாதாரத் துறை இயக்குநர் உறுதிப்படுத்தினார்.
ஈப்போவின் இரண்டு சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, பள்ளியில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காலை 10.30 மணிக்கு முடிவானது.அதையடுத்து, ஐந்து மணிக்குள் மேலும் 96 நச்சுணவு சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களில் 50 மாணவிகள் அடங்குவர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் பள்ளி உணவகச் சமையலறையில் தயாரிக்கப்பட்ட பொரித்த கோழியும் சாக்லேட் பானமும் நச்சுணவு சம்பவங்கள் ஏற்படக் காரணங்களாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சாக்லேட் பானத்திலிருந்து ஒருவித புளித்த நாற்றம் வீசியதாக மாணவர்கள் குறிப்பிட்டனர். பொரித்த கோழி சற்று வேகாதது போல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பள்ளி உணவகத்தை 14 நாள்களுக்கு மூட கிந்தா மாவட்ட சுகாதார அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல் தொடர்பில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.