டுவிட்டர் பயனாளர்களுக்கு வருமானம் – மஸ்க் அதிரடி அறிவிப்பு
டுவிட்டர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு வருமானத்தைப் பகிர்ந்து தர அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.
உலகம் கையடக்கமாக ஆகிவிட்ட காலச் சூழலில், உலக நடப்புகளை தெரிந்துக்கொள்ளும் முன்னணி சமூக ஊடகமாக டுவிட்டர் இருந்துவருகிறது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உலக செல்வந்தரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தைக் கையப்படுத்திய பிறகு அதில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறார். அவருடைய மாற்றங்களாலும் தடாலடிச் செயல்பாடுகளாலும் டுவிட்டர் பயனாளர்கள் கடுமையான அதிருப்தியும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.
டுவிட்டரிலேயே எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் விமர்சித்தும் தொடர் விவாதத்தை, டிரெண்டாகவும் ஆக்கினர்.
அவற்றுக்கெல்லாம் மஸ்க் சளைக்காமல் பதில் சொல்லியபடி வழக்கம்போல தன்னுடைய பாணியைத் தொடர்ந்தார். இந்தப் பின்னணியில் கடந்த வாரம், ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டா நிறுவனமானது திரட்ஸ் எனும் புதிய சமூக ஊடகச் செயலியை அறிமுகம் செய்தது. அது அறிமுகமாகி ஏழு நாள்களுக்குள் 10 கோடி பேர் பயனாளர்கள் சேர்ந்தனர்.
திரட் வருகையால் மிரண்டுபோன எலான் மஸ்க், தன்னுடைய முன்னாள் ஊழியர்களை வைத்து, டுவிட்டரின் தொழில் நுணுக்க ரகசியங்களைத் திருடியதாகவும், மெட்டா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவரின் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மெட்டா தரப்பு கூறியது கவனிக்கத்தக்கது.
இந்தப் பரபரப்புக்கு இடையே, இன்று ஜூலை 14ம் திகதி முதல் டுவிட்டரின் நீலக்குறி அந்தஸ்தைப் பெற்றுள்ள குறிப்பிட்ட பயனாளர்களுக்கு, வருமானத்தைப் பகிர்ந்து வழங்க அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. நீலக்குறி பெற்றுள்ள எல்லாருமே இதைப் பெற முடியுமா என்றால், அதற்கு வாய்ப்பு இல்லை! நீலக்குறி அந்தஸ்து மட்டும் இல்லாமல், மாதத்துக்கு 50 இலட்சம் இம்ப்ரசன்கள் என கடந்த மூன்று மாதங்கள் பெற்றுள்ளவரே, இதற்குத் தகுதியானவர் என்று ட்விட்டர் நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது.
அடுத்த மூன்று நாள்களுக்குள், உரிய தகுதி உடையவர்களுக்கு விளம்பர வருமானம் அனுப்பப்படும் என்றும், அது அவர்கள் ட்விட்டருக்கு அளித்துள்ள அதிகாரபூர்வ கணக்கில் செலுத்தப்படும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டரின் அனைத்து படைப்பாளர்களுக்கும் இந்தத் திட்டத்தை மாத இறுதிக்குள் விரிவுபடுத்த உள்ளதாகவும் ட்விட்டர் நிர்வாகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“படைப்பாளர்களுக்கு விளம்பர வருவாய் உட்பட்ட நிதிப் பகிர்வை விரிவுபடுத்திக்கொண்டு இருக்கிறோம். படைப்பாளர்கள் அவர்களின் பதிவுகளுக்கு வரும் பதில்களுக்கு முதலில் வருவாய் பெறத் தொடங்குவார்கள். டுவிட்டர் மூலமாக நேரடியாக படைப்பாளர்கள் பயன் பெறுவதற்கான வழியாக இது அமையும். மாதக் கடைசிக்குள் தகுதி உடைய அனைத்து படைப்பாளர்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்.” என்று டுவிட்டரின் செய்திக்குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே, பல டுவிட்டர் படைப்பாளர்களும் தங்களுக்குக் கிடைத்த தொகை விவரங்களையும் படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். டாக் காயின் கிரிப்டோகரன்சி இணைப்படைப்பாளரான பில்லி மார்க்கஸ், தனக்கு 37, 050 டொலர் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏழரை இலட்சம் பின்தொடர்வோரைக் கொண்ட பிரையன் கிரஸ்ஸன்ஸ்டீன் என்பவர், டுவிட்டர் தனக்கு சுமார் 25ஆயிரம் டொலர் அளித்துள்ளது என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக, வாடிக்கையாளர்க்கான வருமானப் பகிர்வுக்காக ஐம்பது இலட்சம் டொலர் ஆகியுள்ளது என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.