விவாகரத்தாகி விட்டது திருமண அல்பம் வேண்டாம் .. புகைப்பட கலைஞரிடம் காசை திருப்பி கேட்ட பெண்!
நானும் எனது கணவரும் விவாகரத்து பெற்றுவிட்டோம். இனியும் எங்கள் திருமண புகைப்படங்கள் தேவையில்லை, எனவே திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க நான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்குமாறு புகைப்படக் கலைஞரிடம் பெண் ஒருவர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் டர்பனை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. எல்லார் திருமணத்தை போலவும் இவர்களுடைய திருமணத்திற்கும் புகைப்படம், வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து ஒரு முறை அவருடைய அறையை சுத்தம் செய்த போது அவர்களுடைய திருமண அல்பம் இருந்துள்ளது. அதை பார்த்ததும் அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. உடனே திருமண புகைப்படக்காரருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதில் என்னை உங்களுக்கு இன்னமுமம் ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை. நீங்கள்தான் என் திருமணத்திற்கு போட்டோ எடுத்தீர்கள். எனக்கு 2019ம் ஆண்டு டர்பனில் திருமணம் நடந்தது. தற்போது நாங்கள் விவாகரத்து பெற்று விட்டோம். நீங்கள் திருமணத்திற்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் எனக்கும் என்னுடைய முன்னாள் கணவருக்கும் தேவையில்லை. நீங்கள் அழகாக போட்டோ ஷூட் செய்திருந்தீர்கள். ஆனால் நாங்கள் விவாகரத்து பெற்றதால் நீங்கள் பட்ட பாடெல்லாம் வீணாகிவிட்டது. அந்த புகைப்படங்கள் எனக்கு வேண்டாம் என்பதால் திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என கேட்டிருந்தார்.
இதை முதலில் பார்த்த புகைப்பட கலைஞர் யாரோ நம்மிடம் பிராங்க் செய்கிறார்கள் என நினைத்துள்ளார். பிறகுதான் அந்த பெண் உண்மையிலேயே நம்மிடம் கொடுத்த காசை திருப்பி கேட்கிறார் என்பதை அறிந்த அந்த புகைப்பட கலைஞர், போட்டோ பிரிண்ட் போட்டு கொடுத்தாகிவிட்டது, இனி அவை உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் என்னிடம் காசு கேட்பது தவறு என கூறிவிட்டார். ஆனால் அந்த பெண்ணோ விடுவதாக தெரியவில்லை. கொடுத்த பணத்தில் 70 சதவீதத்தையாவது திரும்ப பெறுவது என்ற முடிவில் அவர் வழக்கறிஞரை நாட முடிவு செய்துள்ளார்.
அதற்கு முன்பு தன்னை பார்க்க நேரில் வருமாறும் அப்போது விவாதித்துக் கொள்ளலாம் என்றும் அந்த புகைப்படக் கலைஞரை அந்த பெண் அழைத்துள்ளார். ஆனால் அவரோ போக மறுத்துவிட்டார். எதுவாக இருந்தாலும் வழக்கறிஞர்கள் மூலம் தொடர்பு கொள்ளுமாறு புகைப்பட கலைஞர் தெரிவித்துவிட்டார். இதையறிந்த அந்த பெண்ணின் கணவர், முன்னாள் மனைவியின் செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.