நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிப்பு: கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆக.17) காலை முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொடூரச் சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு முற்றிலும் முடங்கியுள்ளது. பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக மக்கள் நலன் கருதி பணிக்குத் திரும்பும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது
இவ்வாறாக நாடு முழுவதும் நடக்கும் மருத்துவர்கள் போராட்டம் எல்லைகள் கடந்தும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக, ஏபிவிபி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மம்தா பானர்ஜி பதிவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கோரி மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தப்பட்டது.
இதற்கிடையில், சம்பவம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக இன்று (சனிக்கிழமை) ஆஜராகினார். முன்னதாக நேற்று அவரிடம் விசாரணை நடந்தது. இரவு 9.30 மணிக்கு தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அவர் ஆஜராகியுள்ளார். இது ஒருபுறம் இருக்க சிபிஐ குழு ஒன்று சம்பவம் நடந்த ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் 5 கோரிக்கைகள்,
1. உறைவிட மருத்துவர்களின் ( ரெசிடென்ட் டாக்டர்) பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டங்கள் களத்தில் பெரும்பாலும் பயனவற்றவையாகவே இருக்கின்றன. அவற்றால் குற்றங்களைத் தடுக்க இயலவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019 மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
3. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்ஜி கர் மருத்துவமனையை சூறையாடியவர்கள் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
4. விமான நிலையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். அதேபோல் குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகள் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு கட்டாய பாதுகாப்புக்கான உரிமை உண்டு.
5. குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.