இலங்கையர்களை ஏமாற்றி 5000 கோடி ரூபாய் மோசடி செய்த சீன கும்பல் – விசாரணையில் தகவல்
இணையம் ஊடாக கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதாகக் கூறி இலங்கையர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய சீன பிரஜைகள் உட்பட 39 வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு 5000 கோடி ரூபாவை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சந்தேக நபர்களான சீன பிரஜைகள் உட்பட இந்த 39 வெளிநாட்டவர்களால் மோசடி செய்யப்பட்ட பணம் இலங்கையில் உள்ள 46 கணக்குகளின் கணக்கு வைத்திருப்பவர்களிடம் வாங்கப்பட்டுள்ளது.
அதில் 44 பைனான்ஸ் கணக்குகள் மூலம் சீன அரசின் பைனான்ஸ் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸாரின் இரண்டு விசேட குழுக்கள் விரைவில் இலங்கை வரவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இலங்கை மக்களிடம் இருந்து 800 லட்சம் ரூபாவை மோசடியான முறையில் சம்பாதித்து, அதனைக் கொண்டாடுவதற்காக கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த சந்தேகநபர்கள் விருந்து நடத்தியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பாரியளவிலான மோசடியாளர்களின் பிரதான சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இவ்வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக டுபாயில் இருந்து வெளியேற்றப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுஃ.
இந்த பாரிய மோசடி தொடர்பில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, டுபாய் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளது.