ஹொங்கொங்கில் பேருந்து ஓட்டுநரின் மார்பில் பாய்ந்த இரும்பு கம்பி – உயிர் தப்பிய பயணிகள்

ஹொங்கொங்கில் தாய் லாம் சுரங்கம் அருகே நடந்த விபத்தில், ஓர் இரும்புக் கம்பி பறந்து வந்து பேருந்து ஓட்டுநரின் மார்பில் பாய்ந்தது.
65 வயதான ஓட்டுநர் அதற்குப் பிறகும் நிதானம் இழக்காமல் இழக்காமல் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தியதால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை சுமார் 5.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்து சுரங்கத்திலிருந்து வெளியேறும் தருணத்தில், சுமார் 2 மீட்டர் நீளமுடைய இரும்புக் கம்பி ஒன்று பறந்து வந்து முன்புறக் கண்ணாடியைத் துளைத்து, ஓட்டுநரின் இடது மார்பில் பாய்ந்தது.
அதிர்ச்சி தரும் அந்த சூழ்நிலையில் கூட, ஓட்டுநர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார். பின்னர் கத்தி உதவி கோரினார். உடனே ஒரு பயணி பொலிஸாரையும் மருத்துவ சேவையையும் தொடர்புகொண்டார்.
மருத்துவ குழு துரிதமாக சம்பவ இடத்துக்கு வந்து, ஓட்டுநருக்கு முதலுதவி வழங்கியது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலை ஸ்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய விசாரணையின் அடிப்படையில், அந்த இரும்புக் கம்பி அருகில் சென்ற மற்றொரு வாகனத்திலிருந்து தவறவிட்டு விழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த பயணிகளில் யாரும் காயமடையவில்லை. பேருந்தை வீதியோரம் நிதானமாக நிறுத்திய ஓட்டுநரின் துணிச்சலுக்கும் செயல்முறைக்கும் பேருந்து நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.