பங்குசந்தையில் 10 வீதம் சரிவை கண்ட அதானி குழுமம்!
அதானி குழுமத்தின் பங்குகள் 10 வீதம் சரிவை கண்டுள்ளன. இதன்படி நேற்று (23.06) 52,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை இழந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம், இவ்வருடத்தின் ஆரம்பத்தில், அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பதாகவும், வரி ஏய்ப்பு புகலிடமாக இருக்கும் சில நாடுகளில் அக்குழுமம் வலை நிறுவனங்களை உருவாக்கி, பங்குகள் கையாளுதலில் குற்றங்கள் செய்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதனையடுத்து பங்குசந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்நிலையில், நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம், அதானி பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் சமீபத்திய மாதங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் பங்குகள் சரிந்திருந்தாலும், அடுத்த வாரம் அது மீண்டும் உயரக்கூடும் என வல்லுனர்கள் நம்புகின்றனர்.