இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு: சுமந்திரனுக்கு எதிராக கோஷமிட்ட தமிழ் இளைஞர்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 47 மேலதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது.
மும்முனை போட்டி
தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக தலைவர் தேர்வு மூவருக்கிடையிலான போட்டியாக அமைவதால் இன்றைய கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக தமிழ் அரசியற் தரப்பில் அனைவர் மத்தியிலும் பார்க்கப்பட்டது.
அந்த அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.
இரகசிய வாக்கெடுப்பு
இதனைத் தொடர்ந்து தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பினை நடத்துவதற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரகசிய வாக்களிப்பு இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனு 184 வாக்குகளும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சி.சிறிதரன் 47 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்ரீதரனின் ஆதரவாளர்கள்
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் ”சுமந்திரன் கோ- மகிந்த வின் கோட்டை ஒழிக- தமிழ் தேசியம் வாழ்க” என ஸ்ரீதரனின் ஆதரவாளர்கள் கோசம் எழுப்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைதீவு , அம்பாறை போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்த மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பெண்கள் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்கு ஸ்ரீதரன் வெற்றி பெற வேண்டுமென கோனேசப் பெருமானை போற்றி நகராட்சி மன்றத்திற்குள்ளேயே வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வருகை தந்த 12 பேர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கட்சிக்காக போராடிய மகளிர் அணியின் செயலாளர் பொருளாளர் உபசெயலாளர் ஆகியோர் ஒன்றிணைந்து தமது பெயரை நீக்கியமைக்காக கோணேஷ பெருமான் சிறந்த தெரிவை காட்டுவார் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.
தேர்தல் மூலம் தலைவர் தெரிவு
மேலும் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.