கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மிட்செல் சான்ட்னர்..!
உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மீண்டும் கிரிக்கெட் உலகில் நுழைந்துள்ளது.
அதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் விலகியுள்ளார்.
இன்று காலை சான்ட்னருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் முதல் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. “பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்காக மிட்செல் சான்ட்னர் ஈடன் பார்க் செல்லமாட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அவர் கண்காணிக்கப்படுவார்”என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 61, கேன் வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தானில் ஷாஹீன் அப்ரிடி, அப்பாஸ் அப்ரிடி, தலா 3 விக்கெட்டையும், ஹாரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
227 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 57, சைம் அயூப் 27 ரன்கள் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டி கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.