நடிகை ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோ; வெளியிட்ட நால்வரை கைது செய்த பொலிஸார்!
நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்த டீப் ஃபேக் வீடியோவை பரப்பிய நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
பிரபல நடிகைகளையும் சாதாரண பெண்களையும் போலியாக ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து போலியாக தயாரிக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானபோது, இந்த விஷயம் பூதாகரமானது.
டீப் ஃபேக் டெக்னாலஜி மூலமாக இந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது என்பது தெரிய வர, நடிகர் அமிதாப்பச்சன் உட்பட திரைத்துறையில் பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இது போன்ற வீடியோ பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இப்படியான எச்சரிக்கை வெளியான பிறகும் கூட நடிகைகள் கத்ரீனா, கஜோல், அலியா பட் என தொடர்ந்து நடிகைகளை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு நீடித்தே வருகிறது. இதுபோன்ற வீடியோக்கள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ராஷ்மிகா தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.இதன் தொடர் விசாரணையில் நான்கு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் குறித்தான விவரம் இன்னும் வெளியாகவில்லை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் போலி ஐடியை பயன்படுத்தி இந்த டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் VPN பயன்படுத்தி இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இவர்களை காவல்துறையில் சிக்க வைத்தது மெட்டா நிறுவனம் தானாம். பொலிஸார் மெட்டா நிறுவனத்திடம் சம்மந்தப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்களின் ஐடி விவரங்களை கேட்டு பெற்றுக்கொண்டு தான் இந்த நான்கு பேரையும் பிடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டு உள்ளனர். விசாரணையின் முடிவில் தான் இந்த நபர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும்.