டெங்கு நோய்க்கு மேலதிகமாக பரவும் வேறு நோய்கள்: மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,காய்ச்சல் வந்தால் பயப்படாமல் கவனமாக இருந்தால் மரணம் வராது பாதுகாக்கலாம்.காய்ச்சல் வந்தால் ஓய்வெடுக்க வேண்டும். நாளாந்த உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
இந்த காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது.உதாரணமாக சுவாச தொற்று நோய், உண்ணிக் காய்ச்சல் என்பன பரவுகிறது. காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெறலாம்.
சிறுவர்களை அவதானமாக பார்க்கவேண்டும்.காய்ச்சல் ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில் அதிகளவில் நீரைப் பருக வேண்டும். வளர்ந்தவர்கள் மணித்தியாலத்துக்கு ஒருமுறை 100 மில்லிலீற்றர் நீர் வரையில் பருக வேண்டும். சிறுநீர் போதுமான அளவு வெளியேறுகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
தொடர்ச்சியாக காய்ச்சல் எற்பட்டு சிறுநீர் வெளியேறும் அளவு குறைபவர்கள், சத்தி வந்து நீர் அருந்த முடியாதவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும்- என்றார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து தலையிடி, சத்தி, வயிற்றோட்டம், மூட்டு நோ போன்ற நோய் அறிகுறிகள் வந்தால் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது நல்லது என பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இரண்டு நாட்களுக்கு குறைவாக காய்ச்சல் இருக்குமானால் நன்றாக ஓய்வெடுத்து நீராகராத்தை குடித்தால் நன்று.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து தலையிடி, சத்தி,வயிற்றோட்டம், மூட்டு நோ போன்ற நோய் அறிகுறிகள் வந்தால் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது நல்லது.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளர்கள், வேறு நோயுள்ளவர்கள், வீட்டில் பராமரிக்க ஆட்கள் இல்லாதவர்கள் நோய் நிலை ஏற்பட்டால் வைத்தியசாலையை நாட வேண்டும்.
குருதிப் பரிசோதனையில் வெண்கலங்களின் எண்ணிக்கை 5000ற்கு குறைவாகவும் குறுதிச்சிறுதட்டு எண்ணிக்கை 130000ற்கு குறைவடைந்தால் வைத்தியசாலையை நாடவேண்டும்.
நுளம்பு இடும் முட்டை வரட்சியான காலத்தில் ஆறு மாதங்களுக்கு இருக்கும். மழை காலங்கள் மற்றும் நீர் தேங்கும்போது நுளம்பு பரவும்.வீடு,சுற்றாடல், வீதி என்பவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.நுளம்பு அதிகரித்தால் டெங்கை கட்டுப்படுத்த முடியாது.
பாடசாலை பல்கலைக்கழக மாணவர்கள் அரச தனியார் ஊழியர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டு நீர் தேங்காதவாறு சூழலை பேணவேண்டும்.
டெங்கு நுளம்பு காலை வேளையிலும் மாலை வேளையிலும் அதிகம் உலாவுகிறது. குறித்த நேஙவெளியில் உலாவுவதை தவிர்க்க வேண்டும்.நுளம்பு வலைகளை பாவிக்க வேண்டும். உடலில் நுளம்பு கடிக்காதவாறு தைலங்களை பயன்படுத்த முடியும் – என்றார்.