டில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழை
புது டில்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை போக்க செயற்கை மழையை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நவம்பர் 20-ம் திகதிக்குள் புது டில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் செயற்கை மழையை ஏற்படுத்த இந்திய விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
அப்போது, வானிலை போதுமான அளவு மேகமூட்டமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானி மனிந்திர அகர்வால் தெரிவித்தார்.
இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்காக, நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேகங்களில் அயோடின் கொண்ட உப்பு கலவையை தெளிக்க சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும் அகர்வால் கூறினார்.
“டில்லி முழுவதையும் மூடும் அளவுக்கு பெரிய மேகத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இந்த நோக்கத்திற்காக சுமார் நூறு கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய ஒரு மேகம் போதுமானது” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
புதுடில்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாகும், மேலும் இலங்கையின் முழு மக்கள்தொகையின் அதே மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், குளிர்காலம் நெருங்கும்போது, புது டில்லியில் காற்று மாசு அளவு அதிகரித்து, கடுமையான புகை மூட்டமாக உருவாகிறது.
இந்த ஆண்டும் இதே நிலைதான், இதன் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கவும், வாகனங்கள் செல்லக் கட்டுப்பாடு விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.