சுகாதார துறையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய உறுதி: சுகாதார அமைச்சர்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் டொக்டர். ரமேஷ் பத்திரன, சுகாதாரத் துறையில் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் அடிப்படையில் சில முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நேற்று (24) சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“நாம் அறிந்தபடி, இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு அண்மைய பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், சரிசெய்ய வேண்டியவை நிறைய உள்ளன. எனவே, விஷயங்களை ஒழுங்காக வைப்பதில் அனைத்து பங்குதாரர்களின் ஆதரவு மிக முக்கியமானது.
மேலும், “தேவையான துறைகளில் பொருத்தமான மாற்றங்களைச் செய்ய நான் உறுதியாக இருக்கிறேன். எனவே, நீண்ட காலத்திற்கு கட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட மாற்றங்கள் இரண்டும் செய்யப்படும்.
அண்மைக்காலத்தில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வினவியபோது, குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய தனக்கு சிறிது கால அவகாசம் தேவை என அமைச்சர் குறிப்பிட்டார்.
“சுகாதாரத் துறைக்கு சவாலாக உள்ள ஒவ்வொரு விஷயத்திலும் நான் கவனம் செலுத்துவேன் என்றும் அதற்கேற்ப தீர்வுகளை எடுப்பேன் என்றும் நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று டாக்டர் பத்திரன மேலும் தெரிவித்துள்ளார். .