பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 08 பேர் கைது!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ISIS மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் அந்நாட்டின் சட்ட அமலாக்க நிறுவனங்களால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (CTD) இன்றைய (26.08) தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CTDயின் கூற்றுப்படி, மாகாணத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் 74 உளவுத்துறை பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இதன்போது ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் லியாகத் கான், முகமது ஹசன், ஷான் ஃபராஸ், குல் கரீம், அயூப் கான், முகமது உமீர், அமீர் முஆவியா மற்றும் ரிஸ்வான் சித்திக் ஆகியோர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து வெடிபொருட்கள் (1200 கிராம்), இரண்டு கைக்குண்டு, ஒரு IED வெடிகுண்டு, ஒன்பது டெட்டனேட்டர்கள், 29 அடி பாதுகாப்பு உருகி கம்பி, தடை செய்யப்பட்ட இலக்கியங்கள் மற்றும் ISIS இன் கொடி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.