துணி விற்க எல்லை தாண்டிய 3 பெண்கள் மாயம்: இன்னும் புலப்படாத மர்ம பிண்னனி!
டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உட்பட மூன்று பெண்கள் மெக்சிகோவில் கடந்த மாதம் துணிகளை விற்க எல்லையைத் தாண்டிய நிலையில் தற்போது அவர் மாயமாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நான்கு அமெரிக்க ஆண்களை கடத்தியதாக கடந்த வாரம் காணொளி ஒன்று வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அந்த விவகாரம் உரிய அதிகாரிகளால் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.ஆனால் மூன்று பெண்கள், கடந்த இரண்டு வாரமாக மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் நிலை மர்மமாகவே உள்ளதுடன், அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை FBI அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், மெக்சிகோ அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், பிப்ரவரி 24ம் திகதி தொடர்புடைய மூன்று பெண்களும் எல்லை கடந்துள்ளதாகவும், அந்த பெண்களில் ஒருவரது கணவரே திங்களன்று புகார் அளித்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பெண்களும் துணிகள் விற்பனைக்காக எல்லையோர கிராமங்களுக்கு செல்வது வழக்கம் எனவும், ஆனால் தற்போது 2 வாரங்களாக அவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.