வடகொரியாவிற்கு தப்பிச் சென்ற அமெரிக்கர் குறித்து வெளியான தகவல்!
கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி எல்லை வழியாக வடகொரியாவுக்குத் தப்பிச் சென்ற அமெரிக்க ராணுவ வீரர் குறித்து வடகொரிய அரசு முதன்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடத்தை மற்றும் இனவெறி காரணமாக அவர் வட கொரியாவிலோ அல்லது வேறு மூன்றாவது நாட்டிலோ அரசியல் தஞ்சம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா மற்றும் தென் கொரியாவை பிரிக்கும் கூட்டு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பொதுமக்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, கறுப்பின அமெரிக்க ராணுவ வீரர் டிராவிஸ் கிங் எதிர்பாராதவிதமாக தப்பிச் சென்றார். அவர் வேண்டுமென்றே எல்லையை கடந்ததாக கூறப்படுகிறது. அதாவது, அமெரிக்காவிற்காக உளவு பார்க்க அங்கு அனுப்பப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகொரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் டிராவிஸ் கிங் தனது சொந்த விருப்பத்தின் பேரில் சட்ட விரோதமாக வடகொரியாவுக்கு வந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் அங்கு அடைக்கலம் கோரி வந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தில் இனவெறி மற்றும் அலட்சியம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக டிராவிஸ் கிங் தனது விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக வட கொரிய செய்தி சேவை மேலும் கூறியுள்ளது.
சமத்துவமற்ற அமெரிக்க சமூகம் குறித்த தனது பிரமைகளை தாம் முறியடித்துவிட்டதாக ட்ராவிஸ் கிங் வடகொரிய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதேவேளை அவர் இன்னும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.