அங்கொடை நோயாளி உயிரிழப்பு;சந்தேக நபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்
அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோளாயர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.புதுக்கடை நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் சனிக்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நோயாளர் உயிரிழந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் அனைவரும் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கொடை தேசிய மனநல நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 48 வயதான ஒருவர் கடந்த 25ம் திகதி உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மனநல நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் தம்மிக விஜேசிங்க தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினாலும் மனநல நிலையத்தின் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்றினாலும் தனித்தனியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நோயாளியின் உயிரிழப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தேசிய மனநல நிலையத்தின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.