நாய்க்கு குருதி பரிசோதனை விவகாரம் ;மன்னிப்பு கோரியுள்ள நிலையைய உரிமையாளர்
வவுனியாவில் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலைய உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தை தனது வைத்திய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நபர் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் நாய்க்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
விலங்குகளுக்கு என தனியான வைத்தியர்கள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையம் உள்ள போதும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் மருத்து நிலையம் ஒன்று இவ்வாறு நடந்து கொண்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் எழுத்து மூலம் பதில் வழங்கிய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், குறித்த முறைப்பாடு தொடர்பாக எமது பணிமனையினால் ஆய்வு கூட உரிமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரினால் எமக்கு பதில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் அக் கடிதத்தில் தான் இனிமேல் அத்தகைய தவறை புரியமாட்டேன் என மன்னிப்பும் கோரியுள்ளார் என தங்களுக்கு அறியத் தருகின்றேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமாகாண சுகதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கிய எழுத்து மூல பதிலில்,குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு கூட உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதுடன், தவறு இனிவரும் காலங்களில் இடம்பெறாது என கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றேன் என முறைப்பாட்டாளருக்கு தெரிவித்துள்ளார்.