சிறையில் வெடித்த கலவரம்…கொத்தாக கொல்லப்பட்ட பெண்கள்!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் முக்கிய சிறை ஒன்றில் வெடித்த கலவரத்தில் 41 பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிலரது சடலங்கள் மொத்தமாக கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவேறு குழுக்களுக்கு இடையே வெடித்த கலவரத்திலேயே பெண்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமராவில் உள்ள சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு அதிகாரிகள் தரப்பு டசின் கணக்கான உடல்களை மீட்டுள்ளனர். சிலர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.குறைந்தது 7 பெண்கள் குற்றுயிராக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சியோமாரா காஸ்ட்ரோ இந்த சம்பவம் தொடர்பில் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், பெண்கள் மீது கொடூரமான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் உள்ள Barrio 18 மற்றும் MS-13 குழுவினருக்கு இடையே திடீரென்று சண்டை மூண்டது என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.கலவரம் மற்றும் படுகொலை தொடர்பில் தகவல் வெளியானதும், உறவினர்கள் பலர் சிறைச்சாலைக்கு வெளியே திரண்டனர். சிறைச்சாலைக்கு உள்ளே சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகவே, இந்த கலவரம் வெடித்துள்ளதாக சிறை அமைப்பின் தலைவர் ஜூலிசா வில்லனுவேவா தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இதுபோன்ற கலவரங்களால் தங்களின் நடவடிக்கைகளை கைவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்லார். பெண்கள் சிறைச்சாலையில் 2017க்கு பின்னர் இது ஒரு மோசமான சம்பவமாக பார்க்கப்படுகிறது. 2012ல் Comayagua சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 361 கைதிகள் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.