சிரியாவில் பெரும் பதற்றம்- தப்பியோடிய ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
சிரியாவின் வடக்குப் பகுதியில், அரசு இராணுவத்துக்கும் குர்திஷ் தலைமையிலான போராளிகளுக்கும் இடையிலான மோதலின் போது, சிறையில் இருந்து தப்பிய ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல வாரங்களாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு, அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹசாக்கா நகரை நோக்கி அரசு படைகள் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரம் தற்போது சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கட்டுப்பாட்டில் உள்ளது.
கடுமையான இராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து, சிரியாவின் முக்கிய எண்ணெய் வளங்கள் உள்ள ரக்கா மற்றும் டெய்ர் அஸ் சோர் பகுதிகளில் இருந்து எஸ்.டி.எஃப் படைகள் விலக ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்,சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், சிரியாவில் வேகமாக நடைபெறும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது முக்கியம் என்றும், சிரிய அரசியல் அமைப்பில் குர்திஷ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இருவரும் ஒத்த கருத்து தெரிவித்ததாக சிரியாவின் ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.





