லண்டனில் சீனாவின் ‘மெகா தூதரகம்’: பாதுகாப்பு அச்சங்களுக்கு மத்தியில் பிரித்தானியா அனுமதி
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு குறித்த பல்வேறு கவலைகளுக்கு மத்தியிலும், லண்டனில் புதிய சீனத் தூதரக வளாகத்தை அமைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
சுமார் 255 மில்லியன் பவுண்டுகள் செலவில் 22,000 சதுர மீற்றர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ‘மெகா தூதரகம்’, ஐரோப்பாவிலேயே சீனாவின் மிகப்பெரிய தூதரக வளாகமாகத் அமையவுள்ளது.
லண்டன் டவர் பிரிட்ஜ் அருகே அமைந்துள்ள ‘ரோயல் மின்ட் கோர்ட்’ (Royal Mint Court) பகுதியில் இந்தத் தூதரகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
எனினும், இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.
தூதரக வளாகத்திற்குள் 200-க்கும் மேற்பட்ட ரகசிய அறைகள் அமையவுள்ளதாகவும், இது லண்டனின் முக்கிய தரவு பரிமாற்ற கேபிள்களுக்கு (Data Cables) அருகில் அமைந்துள்ளதால் உளவு பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், பிரித்தானிய உளவு அமைப்பான MI5, சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தம்மால் கையாள முடியும் எனத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி இறுதியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள முக்கியத்துவமிக்க பயணத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைச் சீர்செய்யும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து இழுபறியில் இருந்த இந்தத் தூதரக விவகாரம், தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது





