ஐ.நா. அமைதி படைக்கு அதிகமானவர்களை அனுப்புவது குறித்து இலங்கை ஆராய்வு!
ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.
வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு, இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை, மனையாவெளி பகுதியில் உள்ள ‘சாண்டி பே’ கடற்கரையை பொதுமக்கள் தடையின்றிப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவும், மீன்பிடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
ஒலுவில் துறைமுகத்தைச் சுற்றியுள்ள மண்ணரிப்பு பிரச்சினை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து நாரா நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகள், ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்புத் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.





