மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு
மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றம்கூடும்வேளை, பிரேரணை அங்கீகாரத்துக்காக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும்.
மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே மேற்படி தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது.
முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் தமது அறிக்கையில் மேற்படி நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்வைக்கவுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினையால் அது சாத்தியப்படாமல் உள்ளது.
எனினும், பழைய முறைமையிலாவது தேர்தலை நடத்துமாறும், அதற்கு ஆதரவளிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே தேர்தல் முறைமை குறித்து ஆராய தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது.





