பேரிடர் குறித்து தவறிழைப்பு: தெரிவுக்குழு அமைக்குமாறு வலியுறுத்து!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேற்படி வலியுறுத்தலை விடுத்தார்.
“ இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனவே, குறித்த அனர்த்தம் பற்றி அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததா? இது பற்றி வளிமண்டளவியல் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. மௌன போக்கு தொடர்கின்றது.”
எனவும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அத்துடன், இயற்கை அனர்த்தத்தை தடுக்க முடியாது என்றாலும் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளை தடுக்க முடியும். எனவே, முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? எங்கு தவறிழைக்கப்பட்டது, அதிகாரிகள் அறிவுறுத்தல்களை அரசாங்கத்துக்கு வழங்கவில்லையா அல்லது அரசாங்கம் கவனயீனமாக செயற்பட்டதா, எங்கு தவறு நடந்தது என்பது தெரிய வேண்டும்.
எனவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து இது பற்றி ஆராயுமாறு கோருகின்றேன். எதிர்காலத்தில் இப்படியான நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறினார்.





