வேலையின்றி இருக்கும் 3 இலட்சத்து 65 ஆயிரம் பேர் – பிரதமர் தகவல்!
இலங்கையில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், 2024 தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கான வேலையின்மை விகிதம் 4.5% இலிருந்து 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான வேலையின்மை விகிதம், 4.7% ஆக இருந்தது, 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக, நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துவிட்டதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.




