இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் – அடுத்த வாரம் இறுதி முடிவு!

இலங்கையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் உள்ள தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதிலளிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களே நாங்கள். அதனை தக்கவைக்கும் எண்ணம் இல்லை. எனினும், சட்டமொன்றை இரத்து செய்யும்போது அதனை விஞ்ஞானப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அமுல்படுத்தவுள்ள புதிய சட்டவரைவை தயாரிப்பதற்குரிய குழு, அக்டோபர் 28 ஆம் திகதி கூடி சட்டமூலத்தை இறுதிப்படுத்தி கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பொதுமக்கள் கருத்துக்காக ஒரு மாத காலத்துக்கு சமூகத்தில் வெளியிடப்படும்.
ஒக்டோபர் 28 ஆம் திகதி குழு அறிக்கை வழங்கினால், சட்டமூலம் தயார் என்ற அறிவிப்பை நவம்பர் முதல் வாரத்தில் விடுக்க முடியும். நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய சட்டம் வரும்வரை இருக்கும் சட்டத்தைப் பயன்படுத்த நேரிடும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்தார்.