பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மீண்டும் லண்டனில் ஒன்றுக்கூடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருந்தாலும் இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பேரணியாக செல்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் பிரித்தானியாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் 32 ஆவது ஆர்ப்பாட்டமாக இது இருக்கும் என்று பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம் (PSC) தெரிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்தை நிரந்தர ஒப்பந்தமாக மாற்ற ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தம் நீடித்தால் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் குறைவாகவே நடத்தப்படும் என்று PSC இயக்குனர் பென் ஜமால் கூறியுள்ளார்.
இஸ்ரேல் இதுவரை மேற்கொண்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தங்கள் பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
இதேவேளை மெட் காவல்துறை அதிகாரிகளால் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.