ஜெர்மனியில் பற்றி எரியும் காட்டுத் தீ – வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிர கணக்கான மக்கள்

ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அங்கு வசிக்கும் ஆயிர கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள, சாக்ஸோனி மற்றும் பிராண்டென்பர்க் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில், கடந்த முதலாம் திகதிி ஏற்பட்ட காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 2 வீரர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காட்டுத் தீயானது, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை எரித்து நாசமாக்கியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியிலுள்ள தீப்பிழம்புகளைக் கண்டறியும் பணியில் சிறப்பு கேமராக்கள் பொறுத்திய ஹெலிகாப்டர்களின் உதவியுடன் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரையில், கட்டுப்படுத்த முடியாத அந்தக் காட்டுத் தீ, தற்போது அங்குள்ள முன்னாள் ராணுவப் பயிற்சி முகாமின் அருகில் நெருங்கியுள்ளதால், அங்குள்ள வெடிமருந்துகள் வெடிக்கும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள ஹெய்டௌசர், நியூடோர்ஃப் மற்றும் லிச்டெசி ஆகிய கிராமங்களில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.