இலங்கை ஜனாதிபதியின் மே தினச் செய்தி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது மே தின செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்கச் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இம்முறை நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதகமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் செயல்பட்டனர்.
அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காகத் தேசிய மக்கள் சக்தி செயலாற்றுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.