வீடியோ எடிட்டிங் செயலியை அறிமுகம் செய்த மெட்டா

டிக்டாக் மற்றும் கேப்கட் போன்ற வீடியோ எடிட் செயலிகளைப் போல எடிட்ஸ் என்ற செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. இது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராயிட் மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகிய இரண்டு இயங்கு தளத்தில் இது கிடைக்கிறது.
டிக்டாக் மற்றும் கேப்கட் மீதான தடையை அமெரிக்கா அறிவித்தபோது, கடந்த ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பை மெட்டா முதலில் வெளியிட்டது.
இந்தியாவில், கேப்கட் அறிமுகம் செய்யப்படாமல் இருந்த போது, அமெரிக்க பயனர்களிடையே இது பிரபலமான வீடியோ எடிட்டிங் செயலியாக இருந்தது. இது தடை செய்யப்பட்ட போது, ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கலாம். இந்த வெற்றிடத்தை நிரப்ப இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று, யூடியூபும் தனது பயனர்களுக்கு புதிய வீடியோ எடிட்டிங் திறன்களை அறிமுகம் செய்தது.
இன்ஸ்டாகிராம் எடிட்ஸ் செயலி மூலம், பயனர்கள் தங்களின் போன் கேமராவை பயன்படுத்தி வீடியோ எடுக்கவும், அதனை வாட்டர்மார்க் இல்லாமல் பதிவிடவும் முடியும்.
ஏ.ஐ அனிமேஷன், வீடியோவை மேம்படுத்தும் திறன் போன்ற சிறப்பம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன. மற்ற வீடியோ எடிட்டிங் செயலிகளை போல, மியூஸிக் கொண்டு இதில் எடிட் செய்ய முடியும். இந்த செயலியை பயன்படுத்த இன்ஸ்டாகிராம் கணக்கு அவசியம்.
மெட்டாவின் இந்த புதிய வீடியோ எடிட்டிங் செயலி, பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகளில் இவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.