பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸில்ல் புதிய அப்டேட் – மெட்டா அறிவிப்பு!

அமெரிக்காவில், மார்ச் 18 முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் உள்ளிட்டவற்றில் சமூகக் குறிப்புகள் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் நேற்று அறிவித்தது.
முடிவு செய்துள்ளது முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உண்மை சரிபார்ப்பு போலவே, மெட்டாவின் சமூகக் குறிப்புகள் இயங்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சமூகக் குறிப்புகள் திட்டம் புதிதாக உருவாக்கப்படவில்லை என்றும், எக்ஸ் தளத்தின் திறந்தவெளி வழிமுறைகளை பயன்படுத்தி அதனை வடிவமைத்திருப்பதாகவும் மெட்டா கூறியுள்ளது.
“சமூகக் குறிப்புகள் வசதி, மூன்றாம் தரப்பு உண்மைச் சரிபார்ப்புத் திட்டத்தைக் காட்டிலும் குறைவான சார்புத்தன்மை உடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது முழுமையாக இயங்கும் போது அதிக அளவில் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். 2016 ஆம் ஆண்டு உண்மைச் சரிபார்ப்புத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியபோது, அதன் நடுவர்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. நிபுணத்துவ உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்களை ஈடுபடுத்துவதே சிறந்த தீர்வு என கருதினோம். ஆனால், நாங்கள் நினைத்தது போன்று அது செயல்படவில்லை. குறிப்பாக, அமெரிக்காவில் அவ்வாறு நடக்கவில்லை. எல்லோரையும் போலவே, அவர்களது சொந்த அரசியல் சார்பு மற்றும் விருப்பங்களை கொண்டு செயல்பட்டனர்” என்று மெட்டா நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு உண்மைச் சரிபார்ப்புடன் ஒப்பிடும் போது சமூகக் குறிப்புகள் குறைவான சார்புடையதாக இருக்கும் என்று மெட்டா வலியுறுத்துகிறது. மேலும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகியவற்றில் இருக்கும் பங்களிப்பாளர்கள், குறிப்புகளை எழுதவும், மதிப்பிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.
உண்மைச் சரிபார்ப்புத் திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள பயனர்களுக்காக காத்திருப்புப் பட்டியல் திறக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் நபர், குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது கூடுதல் தெளிவு தேவைப்படும் பதிவுகளில், அதன் சூழல் சார்ந்த தகவலை வழங்க சமூகக் குறிப்புகள் செயல்படும். இந்த சமூகக் குறிப்புகள், சமூக உறுப்பினர்களால் மதிப்பிடப்பட்டு பொதுவெளியில் தெரியும் வடிவத்தில் பல்வேறு கண்ணோட்டங்களில் பரந்த உடன்பாட்டை உறுதி செய்கின்றன. இந்த அமைப்பு எலோன் மஸ்கின் எக்ஸ் தளத்தால் செயல்படுத்தப்பட்ட அணுகுமுறையை போன்று இயங்கவுள்ளது.
“ஒரு சார்பு நிலை பதிவுக்கு எதிரான உண்மைத் தன்மையைக் கூற, ஒரு சமூகக் குறிப்பை வெளியிடுவதற்கு முன் பலதரப்பட்ட பங்களிப்பாளர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு சமூகக் குறிப்புக்கும் 500 வார்த்தைகள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமாக விளங்கக் கூடிய இணைப்பையும் பங்களிப்பார்கள் வழங்க வேண்டும்” என மெட்டா தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமூகக் குறிப்பில் ஆசிரியரின் பெயர் இருக்காது. இவை ஆங்கிலம், ஸ்பானிஷ், சீனம், வியட்நாம், பிரஞ்சு மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் இருக்கும்.