47 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர்

லாகூரில் இன்று நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுகத் தொடக்க வீரர் மேத்யூ பிரெட்ஸ்கீ 148 பந்துகளில் 150 ரன்களை விளாசி நியூஸிலாந்துக்கு எதிராக உலக சாதனை புரிந்தார்.
அதாவது, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் ஒரு வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவே என்பதால் உலக சாதனை நாயகராகியுள்ளார் 26 வயது பிரெட்ஸ்கீ. இவர் 148 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 150 ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்தார்.
1978ம் ஆண்டு மே.இ.தீவுகளின் அப்போதைய தொடக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆண்டிகுவாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 148 ரன்களை எடுத்ததே அறிமுக வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இப்போது 47 ஆண்டுகள் சென்று பிரெட்ஸ்கீ மூலம் இந்தச் சாதனை உடைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் ஆப்கான் அதிரடி தொடக்க வீரர் ரமனுல்லா குர்பாஸ் அயர்லாந்துக்கு எதிராக அறிமுகப் போட்டியிலேயே 127 ரன்களை எடுத்தது பிரெட்ஸ்கீயின் சாதனைக்கு முந்தைய சமீபத்திய நிகழ்வாக இருந்தது.
மேலும், அறிமுகப் போட்டியிலேயே சதம் எடுத்த 4-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார் பிரெட்ஸ்கீ. இவரது ஆட்டம் இன்றைய டி20 இடது காலை இடப்புறம் நகர்த்தி மட்டையை பந்தின் மீது விட்டு விளாசும் ரகம் அல்ல, இவர் மிகப் பொறுமையாக செட்டில் ஆகி, பிறகு அடித்து நொறுக்கும் கிளாசிக் டைப் பேட்டிங். இன்று கூட ஆரம்பத்தில் ஹென்றி, ரூர்க், பென் சியர்ஸ் போன்ற வேகமும் எழுச்சியும் கொண்ட பந்து வீச்சாளர்களை நன்றாகத் தடுத்தாடி புரிந்த பின்னரே அடித்து ஆடத் தொடங்கினார்.
பிரெட்ஸ்கீ எப்படி இன்னிங்ஸைக் கட்டமைத்தார் என்பது அவரது இன்னிங்சைப் பார்த்தாலே புரியும். முதல் 50 ரன்களை 68 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் எடுத்தார். சதம் அடிக்க 128 பந்துகள் எடுத்துக் கொண்டார், அதாவது அடுத்த 50 பந்துகளில் சதம் கண்டார், இதில் மேலும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் மொத்தம் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று எடுத்திருந்தார். ஆனால், அடுத்த 19 பந்துகளில் மேலும் 50 ரன்களை அதிவிரைவு கதியில் சேர்த்து உலக சாதனை புரிந்தார். அதுவும் வேகப்பந்து வீச்சாளரை டீப் தேர்ட்மேன் மேல் சிக்ஸ் விளாசி 150 ரன்களை எட்டி உலக சாதனை மன்னரானார்.
இவரது இயற்பயர் மேத்யூ பால் பிரெட்ஸ்கீ. வலது கை வீரர், விக்கெட் கீப்பர். தென் ஆப்பிரிக்கா உள்நாட்டு கிரிக்கெட்டில் ஈஸ்டர்ன் புராவின்ஸுக்கு ஆடுபவர். தென் ஆப்பிரிக்கா யு-19 வீரர், யு-19 உலகக் கோப்பையில் ஆடி இரண்டாவது அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க டி20 லீகில் ஆடி வருகிறார்.
2022-23 உள் நாட்டு கிரிக்கெட் சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் 4 அரைசதங்களை 60.58 என்ற சராசரியில் எடுத்ததால் இவர் தேர்வுக்கு உரியவரானார். ஏற்கெனவே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருக்கிறார். ஆனால் சோபிக்கவில்லை, இப்போது உலகத்திற்கு உலக சாதனை மூலம் தெரியவந்துள்ளார்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஷவ் மகராஜ், இவரைப் பற்றி கூறுகையில், “விராட் கோலி போன்ற அதே மனநிலை கொண்ட ஒரு கேரக்டர் பிரெட்ஸ்கீ” என்றார். இன்று ஒரு ஸ்டார் பிறந்துள்ளார் என்றே உலக கிரிக்கெட் அரங்கில் பேச்சாக உள்ளது.