இந்தியா : கொலைக் குற்றவாளியை விடுவிக்கும்படி ‘போலி’அதிபர் ஆணை – FIR பதிவு
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/Fake-Presidential-Order-1280x700.jpg)
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலைக் குற்றவாளியை விடுவிக்கும்படி இந்திய அதிபரின் பெயரில் உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டச் சிறைச்சாலைக்குப் போலி ஆணை அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.இதனையடுத்து, ஜனக்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதிபரின் பெயரில் வந்த அந்த ஆணை போலியானது என்பதை உறுதிப்படுத்திய சிறைச்சாலையின் மூத்த கண்காணிப்பாளர் சத்தியபிரகாஷ், அதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அஜய் என்பவரை விடுவிக்கும்படி அந்தப் போலி ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் பிரகாஷ் தெரிவித்தார்.
“அதிபரின் நீதிமன்றம் என்று அவ்வாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அப்படி ஒரு நீதிமன்றம் இல்லை என்பதால் அந்த ஆணைமீது சந்தேகப்பட்டோம்,” என்று அவர் கூறினார்.
சிறைச்சாலை அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் யாரோ முயன்றுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
இவ்விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட சிறைத்துறை அதிகாரிகள், உடனடியாக அதுபற்றிக் காவல்துறையிடம் தெரிவித்தனர். அதனையடுத்து, அடையாளம் தெரியாதவர்கள்மீது வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 7) ஜனக்புரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.