கம்பீர் – ரோகித் இடையே வெடித்த மோதல்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் தவறவிட்டது. இதனால், இந்திய அணிமீது அதிகம் விமர்சனம் கிளம்பியது.
இது, பிசிசிஐக்குள்ளும் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது, இந்தத் தோல்வி தொடர்பாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் – கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையேயும், காம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கு இடையேயும் மோதல் இருப்பதாகத் தகவல் வெளியானது.
ரோகித் மற்றும் அகார்கர் சொல்லும் வீரர்களைத் தேர்வு செய்வதில் காம்பீரின் தலையீடு அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ரோகித் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாததற்கும் காம்பீர்தான் காரணம் எனக் கூறப்பட்டது.
ஆனால், இதை பிசிசிஐ மறுத்திருந்தது. இதுகுறித்து பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ சுக்லா, “காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும், அகர்கருக்கும் இடையே எந்த பிளவும் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவல் தவறானது” என அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. கவுதம் காம்பீர், சாம்பியன்ஸ் டிராபி 2025 அணி தேர்வு தொடர்பான இரண்டு முக்கிய முடிவுகளை நிராகரித்ததாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க இருக்கும் எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில், ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்பட இருக்கிறார். ஆனால் இந்தத் தேர்வின்போது ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக்க காம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்குப் பதில் ரோகித்தும் அகார்கரும் சுப்மன் கில் பெயரை வலியுறுத்தியுள்ளனர். அதுபோல், சஞ்சு சாம்சனைச் சேர்ப்பதற்கு காம்பீர் ஆதரவாக இருந்துள்ளார். ஆனால், அவர்கள், ரிஷப் பண்ட் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். இறுதியில் ஹர்திக்கிற்குப் பதில் கில்லுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. அதேபோல் சஞ்சுவுக்குப் பதில் ரிஷப் அணியில் இடம்பிடித்தார். இதனால், மீண்டும் காம்பீர் மற்றும் ரோகித், அகார்கர் இடையே மோதல் வெடித்திருப்பதாக அந்த அறிக்கை (டைனிக் ஜாக்ரான்) சுட்டிக்காட்டியுள்ளது.