ஈரான் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா வலியுறுத்தல்
ஈரானும் உலக நாடுகளும் 2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்க விரைந்து பணியாற்ற வேண்டும் என்று ஐக்கியநாட்டு நிறுவன (ஐநா) உயரதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இணைந்து கூட்டு விரிவான செயலாக்கத் திட்டத்திற்கு (JCPOA) இணக்கம் தெரிவித்தன.அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஈரான் அதன் அணுசக்தித் திட்டங்களைப் பெரிதும் குறைத்துக்கொள்வதற்கு ஈடாக அதன் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டன.
ஆனால், 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு ஏற்ப அமெரிக்கா அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அதைத் தொடர்ந்து ஈரானும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அணுசக்தி தொடர்பான கடப்பாடுகளிலிருந்து விலகத் தொடங்கியது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான அமெரிக்கத் துணைத் தூதர் ராபர்ட் உட்ஸ், “அரசதந்திரம்தான் சிறந்த வழி என்றபோதும் அணுவாற்றல் பெற்ற ஈரான் என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது. அதை உறுதிசெய்வதற்கு, தேசிய அளவிலான ஆன அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம்,” என்று கூறினார்.
வரும் ஜனவரி மாதம் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக வட்டாரப் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகை குறித்துச் சென்ற மாதம் ஐரோப்பிய, ஈரானிய அரசதந்திரிகள் சந்தித்துப் பேசினர். ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.இதன் தொடர்பில் செயலாற்ற வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்று ஐநா அரசியல் விவகாரப் பிரிவுத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோ, ஐநா பாதுகாப்பு மன்றத்திடம் கூறினார்.
ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளும் அமெரிக்காவும் இதற்குப் பொறுப்பு என்றாலும் அவற்றின் முடிவு அனைவரையும் பாதிக்கக்கூடியது என்று குறிப்பிட்ட அவர், மேலும் நிலையற்றதன்மையை இந்த வட்டாரம் தாங்காது என்றார்.
தேவைப்பட்டால் ஈரான் மீதான அனைத்துலகத் தடைகள் அனைத்தையும் மீண்டும் நடப்புக்குக் கொண்டுவரத் தயார் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை மன்றத்துக்கு இம்மாதத் தொடக்கத்தில் எழுதிய கடிதங்களில் தெரிவித்தன.