அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா – விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு
அமெரிக்க அதிகாரிகள் சிலர் மீது சீனா விசா கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹொங்கொங் தொடர்பான விவகாரங்களில் அவர்கள் முறையாக நடந்துகொள்ளவில்லை என்று பெய்ச்சிங் கூறியது.
தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தும்படி சீனா, வொஷிங்டனைக் கேட்டுக்கொண்டது.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்த தங்களின் நிலையை எடுத்துச் சொல்லிவிட்டதாகச் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங் தொடர்பான விவகாரங்களைப் பயன்படுத்திச் சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா கண்மூடித்தனமாக விசா கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக அவர் கூறினார்.
அத்துடன் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அது அதிகம் தலையிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹொங்கொங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்திய அதிகாரிகள் மீது தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா மிரட்டிய ஒரு மாதத்தில் சீனாவின் அறிவிப்பு வந்துள்ளது.
45 எதிர்த்தரப்பு ஆர்வலர்களுக்குப் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா அவ்வாறு எச்சரித்தது.