நாள் முழுவதும் ஆற்றலை வழங்கும் முக்கிய காலை உணவுகள்…!
நாள் முழுவதும் ஆற்றல் குறைவில்லாமல் இருக்க: காலையில் எழுந்தவுடன் பலவீனமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்வது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபடவும் நாள் முழுவதும் ஆற்றல் குறைவில்லாமல் இருக்கவும், உங்கள் டயட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியமான, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவுகளை தேர்வு செய்வதன் மூலம் , பலவீனம் மற்றும் சோர்வு பிரச்சனையை பெருமளவில் அகற்றலாம். அதோடு, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை உட்கொள்வதால், ஆற்றல் அபரிமிதமாக இருக்கும்.
உலர் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குவது உங்களை உற்சாகமாக உணர வைக்கும். பாதாம், முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகளில் உள்ள அனைத்து விதமான சத்துக்களும் உங்கள் சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உலர் பழங்களை ஊறவைத்தும் சாப்பிடலாம்.
பேரீச்சம்பழங்கள் ஆற்றலின் சுரங்கம் எனலாம். பேரீச்சம்பழத்தில் உள்ள இருக்கும் இரும்பு சத்து உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், இதில் உள்ள நார்ச்சத்து உங்கள் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இதனால், மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகள் நீங்குகிறது.
உலர் பழங்களைத் தவிர, சில விதைகளை டயட்டில் சேர்ப்பது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கலாம். சியா விதைகள் சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இருப்பினும், விதைகளை சரியான அளவில், சரியான முறையில் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
பப்பாளியில் டீடாக்ஸ் தன்மை உள்ளது. எனவே, பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையும் நீங்கும். முழு பலனைப் பெற பப்பாளி சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு வேறு எதையும் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஆற்றலை அள்ளி வழங்கும் வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் உள்ளன. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்.