மலேசியாவில் ஆழ்குழிக்குள் விழுந்து மாயமான இந்தியப் பெண்: தொடரும் மீட்புப் பணிகள்!
கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜீத் இந்தியா வட்டாரத்தில் உள்ள சாலையில் ஆகஸ்ட் 23ஆம் திகதியன்று யாரும் எதிர்பாரா வகையில் திடீரென்று ஆழ்குழி ஏற்பட்டது.அப்போது அங்கு நடந்துகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 48 வயது பெண் அந்த எட்டு மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் விழுந்து மாயமானார்.அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
ஆகஸ்ட் 24ஆம் மிகதி காலை 9 மணிக்குத் தேடும் பணிகள் தொடர்ந்தன.ஆனால் ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 11 மணி நிலவரப்படி தென் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமியை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அவரது செருப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகம்மது ஈசா சம்பவ இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.ஆழ்குழியை மேலும் தோண்டி தேடுதல் பணிகள் விரிவுப்படுத்தப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.
குழிக்குள் விழுந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு மீட்புப் பணிகள் குறித்து தகவல்கள் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.அவர்களது விசாவை நீட்டிப்பது குறித்து இந்தியத் தூதரகத்துடன் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தம் தாயாரைக் காப்பாற்றுமாறு சத்தம் போட்டு அழுதபடி, மீட்புப் பணியாளர்களிடம் குழிக்குள் விழுந்த பெண்ணின் மூத்த மகன் மன்றாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு அருகில் குழிக்குள் விழுந்த பெண்ணின் கணவரும் சில பெண்களும் அமர்ந்திருந்தனர்.குழிக்குள் விழுந்த பெண்ணை மீட்க முடியுமா என்று கண்ணீர் மல்கும் கண்களுடன் அவர்கள் அதிகாரிகளைக் கேட்டனரர. “நான் நடந்துகொண்டிருந்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் குழிக்குள் விழுந்து மாயமானார்,” என்று சம்பவம் நிகழ்ந்தபோது அங்கு இருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.