இந்தியா: பிரதமர் மோடியைப் பாராட்டி பேசிய மனைவி… மணமுறிவு செய்த கணவர்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் பாராட்டிப் பேசியதால் தன் கணவர் தன்னை மணமுறிவு செய்துவிட்டதாகப் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர் குடும்பத்தார்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
தன் கணவர், மாமியார், அவரின் குடும்பத்தினர் சேர்ந்து தன்னைக் கடுமையாக அடித்து உதைத்ததாகவும் தன்னைக் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்த்ததாகவும் அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2023 டிசம்பர் 23ஆம் திகதி பஹ்ரைச் நகரைச் சேர்ந்த தனக்கும் அயோத்தி நகரைச் சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் திருமணம் நடந்ததாகவும் அதற்காகத் தன் தந்தை அவருடைய வசதிக்குமீறி செலவுசெய்ததாகவும் அப்பெண் தெரிவித்தார்.
திருமணத்திற்குப் பின் அயோத்தி நகரில் இடம்பெற்ற வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்ட அப்பெண், தன் கணவர் காதுபட பிரதமர் மோடியையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் தான் பாராட்டிப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
அதனைக் கேட்டதும், தன் கணவர் தன்னை உடனே பிறந்த வீட்டிற்கே அனுப்பிவிட்டதாக அவர் கூறினார். அத்துடன், தன் கணவர் சூடான பருப்புக் குழம்பு இருந்த பாத்திரத்தைத் தன்மீது வீசியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து, தான் மீண்டும் அயோத்தி சென்று, தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்ததாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், பிரதமரையும் முதல்வரையும் இழிவாகப் பேசிய தன் கணவர், மும்முறை ‘தலாக்’ சொல்லி தன்னுடனான திருமண உறவை முறித்துக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர் அர்ஷத்மீதும் அவருடைய குடும்பத்தினர் எழுவர்மீதும் காவல்துறை வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின்கீழும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின்கீழும் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறது.