திசை திரும்பிய ‘அம்பில்’ புயல் – ஜப்பானில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து சேவைகள்
ஜப்பானில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ‘அம்பில்’ புயல் ஆகஸ்ட் 17ஆம் திகதி கரையைக் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் சில பகுதிகளைப் பதம்பார்த்த அப்புயலால் தலைநகர் தோக்கியோவில் அதிகம் பாதிப்பில்லை. எனவே ரயில்களும் சில விமானங்களும் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.
‘அம்பில்’ புயல் நெருங்கியதைத் தொடர்ந்து டோக்கியோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆகஸ்ட் 16ஆம் திகதி உயர் விழிப்புநிலை அறிவிக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து, சுற்றுலாப் பயணங்கள், நிகழ்ச்சிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டதோடு பள்ளிகளும் மூடப்பட்டன.ஆனால், ஆகஸ்ட் 17ஆம் திகதி, மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்று வடகிழக்குத் திசையில் நகர்ந்து பசிபிக் பெருங்கடலை நோக்கிச் சென்றது.
இருப்பினும் நாட்டின் வடக்குப் பகுதியில் சில இடங்களில் கனத்த மழை பெய்துவருவதாக ஜப்பானின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.கனமழை பெய்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அது குறிப்பிட்டது.
டோக்கியோவில் முன்னர் அஞ்சப்பட்ட அளவிற்குச் சேதம் இல்லை என்றாலும், சில இடங்களில் ஜன்னல்கள் உடைந்ததாகவும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கூறப்பட்டது.
ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை அதிவேக ‘புல்லட்’ ரயில் சேவை பெரும்பாலும் வழக்கநிலைக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டது.
‘ஆல் நிப்பான் ஏர்வேஸ்’, ‘ஜப்பான் ஏர்லைன்ஸ்’ நிறுவனங்களின் மொத்தம் 68 விமானச் சேவைகள் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை ரத்து செய்யப்பட்டிருந்ததாக ‘என்எச்கே’ ஒலிபரப்புக் கழகம் கூறியது. அதற்கு முந்தைய நாள் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.