அரசாங்கத்தில் இணையப் போவதில்லை – பொன்சேகா, சம்பிக்க மறுப்பு
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, உள்ளூர் ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை என்றும், தான் அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்றும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி வேட்புமனுவை ஆதரிப்பதாக வெளியான செய்திகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா நிராகரித்தார்.
“ஜனாதிபதி வேட்பாளரை நான் ஆதரிக்க மாட்டேன். வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, தாம் அரசாங்கத்துடன் இணைவதாக உள்ளூர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் ஆதாரமற்றவை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது ’எக்ஸ்’ தளத்தில் விடுத்துள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவொரு அமைச்சு இலாகாவையும் நாங்கள் ஏற்க மாட்டோம், மாறாக மக்களின் நலனுக்காக நிற்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.