இலங்கை ஜனாதிபதி விடுத்த பணிப்புரை!
முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அரச சேவைகளை தடையின்றி பேணுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் எந்தவித இடையூறும் இன்றி அத்தியாவசிய சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு போன்ற அத்தியாவசிய வகைகளின் கீழ் வரும் நிறுவனங்கள் கூட்டாக இந்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில், நாடு முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்