வவுனியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் அநாகரிக செயல்!! வைரலாகும் காணொளி
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய (25) தினம் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
நேற்றைய தினம் (25.03) இரவு வேளையில் குறித்த உத்தியோகத்தர் பிரதான வீதியில் பொலிஸ் நிலையம் முன்பாக மது அருந்திக்கொண்டு இருக்கும் போது குறித்த பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் அவரிடம் சென்று வீதியில் மது அருந்த கூடாது என்பது தெரியாதா..? என்று கேட்க, அவரை ஒருமையில் பேசியுள்ளதுடன் தான் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த பகுதிக்கு வந்த மேலும் ஒருவர் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போ என்று தெரிவிக்கின்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அவரும் மது போதையில் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொது இடத்தில் இருந்து மது அருந்தியமை தொடர்பில் 119 என்ற பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த போதும், பொலிசார் குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள் இடம்பெறும் போது, நெடுங்கேணி பொலிஸார் வழிபாடு செய்தவர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்த கொண்டிருந்ததுடன் 8 பேரை கைதும் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.