டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல்! 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!

புது டெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ரயில்களில் பயணிக்க மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியதாலும், சில விரைவு ரயில்கள் வர தாமதமானதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், புது டெல்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் விரைவு ரயிலுக்காக நடைமேடை சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர்.
இதனிடையே, ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-இல் திரண்டனா். இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதிகளவிலான பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத பொது பயணச் சீட்டுகள் விற்கப்பட்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய ரயில்வே காவலர்கள் பணியில் இல்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் முயற்சித்தது.
ஆனால், விபத்தில் காயமடைந்த 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் லோக்நாயக் அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.