சுவிஸில் ரயிலில் விட்டுச்செல்லப்பட்ட 120 தங்கக் கட்டிகள்
சுவிட்சர்லந்தில் ரயிலில் 120 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டுபிடிக்கப்பட்ட தங்கக் கட்டிகள் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கப்படவுள்ளன.
அவை 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செயிண்ட் கேல்லன் நகரிலிருந்து லூசர்ன் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ரயிலில் கண்டுபிடிக்கப்பட்டன. தங்கக் கட்டிகள் இருந்த பொட்டலத்தில் “ICRC மதிப்புமிக்க பொருள்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அது ஜெனீவா நகரில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துலக அமைப்பைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. தங்கக் கட்டிகளின் மொத்த எடை 3.7 கிலோகிராமாகும். விரிவான விசாரணைகளுக்குப் பிறகும் அவற்றின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பொட்டலத்தில் ICRC என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அதன் உரிமையாளர் அவற்றை அந்த அமைப்பிற்கு வழங்க விரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இன்னும் தங்கக் கட்டிகளைப் பெறவில்லை என்று கூறிய ICRC, அவற்றை விற்கப்போவதாகக் குறிப்பிட்டது. உலகெங்கும் வன்முறையாலும் சண்டையாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் உள்ள தனது செயல்பாடுகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும். நன்கொடைக்கு அமைப்பு நன்றி தெரிவித்துக்கொண்டது.