புத்தர் சிலை விவகாரம் ; தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதியன்று, முறையான அனுமதி இன்றி கடற்கரை பாதுகாப்பு வலயத்திற்குள் புத்தர் சிலையை நிறுவப்பட்டது.
இந்த நிலையில், கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறை சிலையை அகற்ற முயன்றபோது அங்கு பதற்றமான சூழல் உருவானது. தேரர்களும் பிரதேச மக்களும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சட்டவிரோத கட்டுமானம் மற்றும் அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற காரணிகளின் கீழ், அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





