ஜப்பானில் அச்சுறுத்தும் பறவை காய்ச்சல் – 3.30 லட்சம் கோழிகளை அழிக்க திட்டம்
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒகயாமா மாகாணத்தில் பறவை காய்ச்சல் தொற்று தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முதலில் பறசை காய்ச்சல் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியது.
இதுவரை 25 மாகாணங்களில் பறவைக்காய்ச்சல் பரவி உள்ளதாகவும், சுமார் 15 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜப்பானின் அமோரி மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் திடீரென்று கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரித்த நிலையில், உடனடியாக நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பரிசோதனை செய்த 13ல் 11 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து பண்ணையில் உள்ள 3.30 லட்சம் கோழிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணை முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்பட்டது. பண்ணையிலிருந்து 1.8 கி.மீ தொலைவு வரை கோழிகள் மற்றும் அதன் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவு பறவைக் காய்ச்சல் தொற்று பரவிவருவது குறிப்பிடத்தக்கது.