ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி; ஒருவர் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘லேக் காஜெல்லிகோ’ (Lake Cargelligo) எனும் சிறுநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா நேரப்படி இன்று மாலை சுமார் 4:40 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவர் உயிரிழந்துள்ளதை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்துள்ள பொலிஸார், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 1,500 பொதுமக்களையும் பாதுகாப்புக் கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பார்ப்வென் (Barwon) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராய் பட்லர், இது மிகவும் கொடூரமான சூழல் எனத் தெரிவித்துள்ளார்.





